நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விஜய் நேற்று ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, த.வெ.க தலைவர் விஜயை உடனடியாகப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க எம்.எல்.ஏ-க்களுடன் அக்கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும், அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், எம்.எல்.ஏ-க்கள் யாரும் சோர்ந்து போய்விடக்கூடாது என்றும் அவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.
