அமெரிக்கா-ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சேதங்களை மறைக்க முயன்றாலும், செயற்கைக்கோள் புகைப்படங்களின் ஆய்வின்படி மத்திய கிழக்கில் உள்ள 15 அமெரிக்க ராணுவத் தளங்களில் சுமார் 228 இடங்கள் ஈரானின் தாக்குதலால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முக்கிய விமானத் தளங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் ஈரானின் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா ஒப்புக்கொண்டதை விடவும் இந்தச் சேதம் பலமடங்கு அதிகம் எனவும், இதில் ஏழு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இந்தப் போரால் அமெரிக்காவிற்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் (50 பில்லியன் டாலர்) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் நவீன பாதுகாப்பு அமைப்புகளான ராடார் மற்றும் ‘டிஜிட்டல் நரம்பு மண்டலம்’ எனப்படும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை ஈரான் திட்டமிட்டுத் தகர்த்துள்ளது.
ராடார் கருவிகளை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக, அவற்றை இயக்கும் தரவு மையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை ஈரான் அழித்துள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மிகப்பெரிய அளவிலான உயிர்ச் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகள் காரணமாக, பல ராணுவத் தளங்களில் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.
