மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவருடனான தனது நினைவுகளை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். “ஜெயிலர் படப்பிடிப்பின் போது என்னைச் சந்தித்த அவர், தனது 100-வது படத்தை நான் பண்ண வேண்டும் எனக் கேட்டார், நானும் கண்டிப்பாகச் செய்யலாம் என வாக்குறுதி அளித்தேன்” என நிறைவேறாத அந்த ஆசை குறித்து ரஜினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆர்.பி.சௌத்ரியின் நாணயம், நேர்மை மற்றும் தெய்வ பக்தியைத் தான் வியந்து பார்த்ததாகக் குறிப்பிட்ட ரஜினி, “எதை கொண்டு வந்தோம், எதை கொண்டு போகப்போகிறோம்” என அவர் அடிக்கடி கூறும் தத்துவமே அவரை எப்போதும் சந்தோஷமாக வைத்திருந்தது என்றார். தனது எல்லையை உணர்ந்து ரிஸ்க் எடுக்காமல் உழைத்த ஒரு சிறந்த நண்பரைத் தான் இழந்துவிட்டதாக ரஜினி அளித்த இந்தப் பேட்டி ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
