தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தற்போது இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது. தவெக-காங்கிரஸ் கூட்டணி வரவிருக்கும் உள்ளாட்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும் என்றும், காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்றும் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச்சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட காங்கிரஸின் இந்த ஆதரவு தவெக-விற்குப் பேருதவியாக அமைந்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற தவறான முடிவுகளை எடுத்துத் தன்னைத்தானே அழித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

டெல்லி, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காங்கிரஸிற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், சொந்தக் கட்சியை மூடும் வேலையைத்தான் அக்கட்சியினர் செய்து வருவதாகவும், இறுதியில் அவர்கள் தோல்வியையே தழுவுவார்கள் என்றும் சாடியுள்ளார். நீண்டகால கூட்டணியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.