சமூக வலைதளங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தான் காதலிப்பதாக நினைத்த பெண், தனது சொந்த மனைவிதான் என்று தெரியாமல் சிக்கிய கணவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்த பிரபுதத் திரிபாதி என்பவருக்கும், சோனி திரிபாதி என்ற பெண்ணுக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சோனி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கணவன் தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
தன்னையும் குழந்தையையும் கைவிட்ட கணவனுக்குப் பாடம் புகட்ட சோனி ஒரு அதிரடி முடிவை எடுத்தார். இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண்ணின் பெயரில் போலிக் கணக்கை தொடங்கி, தனது கணவருக்கு நட்பு அழைப்பு விடுத்தார். தனது மனைவியின் ‘ஃபேக் ஐடி’ என்பதை அறியாத பிரபுதத், அந்தப் பெண்ணுடன் தீவிரமாகச் சாட்டிங் செய்யத் தொடங்கினார். நாளடைவில் இது காதலாக மாறவே, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யவும் அவர் சம்மதித்தார்.
பல நாட்கள் பேசி வந்த நிலையில், நேரில் சந்திக்க பிரபுதத் வற்புறுத்தினார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சோனி, கடந்த மே 2-ம் தேதி தாராகஞ்ச் பகுதியில் உள்ள நாகவாசுகி கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். புதிய காதலியுடன் இரண்டாம் வாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவில் ஆவலுடன் கோயிலுக்குச் சென்ற பிரபுதத்திற்கு அங்கே பேரதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே காதலிக்கு பதிலாகத் தனது மனைவி சோனி நிற்பதைக் கண்டு அவர் உறைந்து போனார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபுதத், ஆத்திரத்தில் சோனியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்ப முயன்றார். கோயிலில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பிரபுதத்தை மடக்கிப் பிடித்தனர். சோனி அளித்த புகாரின் அடிப்படையில், மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரபுதத்தைச் சிறையில் அடைத்தனர்.
தன்னை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கணவனை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
