மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி, விடுமுறைக்காக நஸ்ராப்பூரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த மே 1-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த பீம்ராவ் காம்ப்ளே (65) என்ற முதியவர், சிறுமியிடம் கன்றுக்குட்டிகளைக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள மாட்டுத் தொழுவத்திற்குச் சிறுமியைக் கடத்திச் சென்ற அந்த நபர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். எவருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, சிறுமியின் உடலை மாட்டுச் சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் தேடியபோது, சாணக் குவியலுக்கு அடியில் இருந்து உடல் மீட்கப்பட்டது.

போலீஸார் பீம்ராவ் காம்ப்ளேவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அளித்த பதில் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. “சம்பவம் நடந்த அன்று நான் போதையில் இருந்தேன், அதனால் என்ன செய்தேன் என்று தெரியவில்லை” எனத் தற்காப்புக்காகத் மிகச் சாதாரணமாகக் கூறி தப்பிக்க முயன்றுள்ளார். எனினும், திட்டமிட்டு இந்த குற்றத்தை அவர் செய்திருப்பதாகக் கருதும் போலீஸார், தீவிரமாகத் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூரச் செயல் குறித்துக் கேள்விப்பட்ட குற்றவாளியின் மனைவி, தனது கணவர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொன்ற அதே இடத்தில் வைத்து அவரை அடித்துக் கொல்ல வேண்டும். அவர் முகத்தில் கூட நான் விழிக்க விரும்பவில்லை. அவருக்குத் தூக்குத் தண்டனை மட்டும் போதாது, உயிருடன் எரிக்க வேண்டும். அப்போதுதான் என் மனதிலுள்ள ஆத்திரம் தணியும். அவர் பெயரை எங்களோடு சேர்த்திருப்பதால், மக்கள் பேசும் வசவுச் சொற்களை நாங்கள் கேட்க வேண்டியுள்ளது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் நஸ்ராப்பூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் இந்த வழக்கை விரைந்து விசாரித்து, நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.