தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ‘தொங்கு சட்டசபை’ உருவாகியுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவளிக்கலாம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்து காங்கிரஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ராகுல் காந்தி மற்றும் விஜய்யின் இணக்கமான உறவு இதற்குப் பச்சைக்கொடி காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் இதுகுறித்து கூறுகையில், தவெக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அதுகுறித்து கட்சிக்குள் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சிபிஎம் 2 இடங்களையும், சிபிஐ 2 இடங்களையும் வைத்துள்ளன. இவர்களின் 4 இடங்கள் விஜய்யின் வெற்றிக்கு மிக முக்கியமானது.

மறுபுறம், விசிக தலைவர் திருமாவளவன் “நாங்கள் கணித்தது போலவே தொங்கு சட்டசபை அமைந்துள்ளது; கூட்டணி ஆட்சியை விரும்பிய மக்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது அவர் தவெக-விற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதையே காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விசிக வசம் 2 இடங்கள் உள்ளன.

காங்கிரஸ் (5), கம்யூனிஸ்ட்கள் (4), மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகள் கைகோர்த்தால் மொத்த பலம் 119 ஆக உயரும். இதன் மூலம் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மெஜாரிட்டியைத் தாண்டி ஆட்சியைக் கைப்பற்றும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக விஜய் மகுடம் சூடுவாரா என்பது இந்தச் சிறிய கட்சிகளின் கைகளில்தான் உள்ளது.