திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. அப்போது திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரின் முகவராகப் பணியாற்றி வந்த பாஸ்கர் என்பவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 58 வயதான இவர் பூண்டி மேற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் மருத்துவமனையில் பாஸ்கரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பரபரப்பாக இருந்த நேரத்தில், வாக்கு எண்ணும் மையத்திலேயே ஒரு முகவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் பணியாளர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.