தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை தமிழக ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமக்கு போதிய பலம் இருப்பதாகவும், அடுத்த 2 வாரங்களுக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி, ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரவுள்ளார். சுமார் 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்க விஜய் தயாராகி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் நாளை அனுமதி அளிக்கும் பட்சத்தில், மிக விரைவில் பதவியேற்பு விழாவை நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 108 தவெக எம்.எல்.ஏ-க்களும் எவ்வித அரசியல் நெருக்கடிகளுக்கும் உள்ளாகாமல் இருக்க, சென்னையில் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்கப் போகும் அந்த வரலாற்றுத் தருணத்திற்காகத் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
