2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அரசியல் சூழலை மட்டுமின்றி, வணிகச் சந்தையையும் தலைகீழாக மாற்றியுள்ளன. யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பங்குச் சந்தையில் சன் டிவி நெட்வொர்க் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 74 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த அரசியல் மாற்றம் பங்குச் சந்தையில் எதிரொலித்ததை அடுத்து, கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் உள்ள சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தில் 10 சதவீதம் வரை சரிந்தன.

காலை வர்த்தகத் தொடக்கத்தில் ரூ.611 ஆக இருந்த ஒரு பங்கின் மதிப்பு, முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும் சரசரவெனச் சரிந்து ரூ.547.55 என்ற நிலையை எட்டியது. இதன் மூலம் ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2,300 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ரூ.23,825 கோடியாக இருந்த நிறுவன மதிப்பீடு, தற்போது ரூ.21,562 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சொந்தத் தொகுதியிலேயே தவெக வேட்பாளரிடம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையிலும் தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தபால் வாக்குகளில் தவெக முன்னிலை பெற்று திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளியது. தமிழகத்தின் பிரதான திராவிட கட்சிகளுக்கு ஒரு நடிகரின் கட்சி இவ்வளவு பெரிய சவாலைத் தரும் என்பதை அரசியல் விமர்சகர்கள் யாரும் கணிக்கவில்லை.