உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது கொலையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொலை செய்து கால்வாயில் வீசியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கொல்லப்பட்ட குல்வந்த் சிங்கிற்கும், குட்டி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குட்டிக்கு மொபைல் கடை நடத்தி வந்த கபில் மௌரியா என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவுக்கு குல்வந்த் இடைஞ்சலாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட குட்டி முடிவு செய்தார். இதற்காகத் தனது ப்ளாட்டில் ஒரு கூடாரத்தை அமைத்து தங்கி வந்த குட்டி, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கணவனை அங்கு வரவழைத்துள்ளார்.

அங்கு நடந்த மது விருந்தின் போது, கணவனின் மதுவில் ரகசியமாக சல்பாஸ் மாத்திரைகளை குட்டியும் அவரது காதலனும் கலந்துள்ளனர். மதுவின் சுவை மாறவே குல்வந்த் சந்தேகப்பட்டு கேட்டபோது, “கிளாஸில் ஏதோ ஒட்டியிருக்கும்” என ஆசை வார்த்தை கூறி மீண்டும் ஒரு பெக் ஊற்றிக் கொடுத்துள்ளார் குட்டி. சிறிது நேரத்தில் குல்வந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்கு பின், சடலத்தை காரில் ஏற்றிச் சென்று நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் வீசியுள்ளனர். அடுத்த நாள் எதுவுமே தெரியாதது போல குட்டி தனது மாமியார் வீட்டிற்குச் சென்று கணவனைத் தேடுவது போல் நாடகமாடியுள்ளார். 8 நாட்களுக்குப் பிறகு போலீஸ் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றதை குட்டி ஒப்புக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மனைவி குட்டி மற்றும் அவரது காதலர் கபிலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 10 ஆண்டு கால திருமண வாழ்க்கையை ஒரு வருட கள்ளக்காதலுக்காகச் சீரழித்த அந்தப் பெண்ணின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.