தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள எக்ஸிட் போல் (Exit Poll) கருத்துக்கணிப்புகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த கணிப்புகள் அனைத்தும் ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்பத் திணிக்கப்பட்டவை என்று விமர்சித்த அவர், 2016 தேர்தலிலும் இதேபோல் தான் அனைத்து ஊடகங்களும் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறின. ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 137 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்; அதே வரலாறு இப்போதும் திரும்பும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
வடநாட்டுப் பத்திரிகையாளர்களும், சில செய்தி நிறுவனங்களும் எங்கோ ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு தவறான கணிப்புகளை வெளியிட்டு வருவதாகவும், தமிழகத்தின் 6 கோடி வாக்காளர்களின் உண்மையான மனநிலை அவர்களுக்குத் தெரியாது என்றும் அவர் சாடினார். மீடியாக்களுக்கு இது வெறும் மூன்று நாள் தீனி மட்டுமே என்றும், எதார்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இவரின் இந்த ஆவேசமான பேச்சு தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
