ஒரே கருப்பையில் வளர்ந்து சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்க முடியுமா என்ற வியக்கத்தக்க கேள்விக்கு, லண்டனைச் சேர்ந்த மிஷெல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் (49) சகோதரிகளின் வாழ்க்கை ‘ஆம்’ என பதிலளித்துள்ளது.
1976-ல் பிறந்த இவர்கள், 49 ஆண்டுகளாகத் தங்களை ஒரே தந்தையின் குழந்தைகள் என்று நம்பி வந்த நிலையில், 2022-ல் மேற்கொண்ட டிஎன்ஏ பரிசோதனை மூலம் தங்களுக்கு வெவ்வேறு தந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
‘ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்’ எனப்படும் இந்த அரிய உயிரியல் நிகழ்வு, ஒரு பெண் ஒரே மாதவிடாய் சுழற்சியில் இரண்டு முட்டைகளை வெளியிட்டு, அவை வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருத்தரிக்கப்படும்போது நிகழ்கிறது.
உலகிலேயே இதுவரை 20 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள இந்த விசித்திரமான நிகழ்வு, பிரிட்டனில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாகும். சிறுவயது முதலே காப்பகங்களில் வளர்ந்த இந்தச் சகோதரிகள், தற்போது தங்களது உண்மையான தந்தையரைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் லவினியாவின் தந்தையான ஆர்தர் என்பவருடன் இருவரும் தற்போது நெருக்கமான உறவைப் பேணி வருகின்றனர். ஆர்தர் தனது மகள் லவினியாவோடு மிஷெலையும் தன் மகளாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
“எங்கள் தந்தையர் வேறாக இருந்தாலும், நாங்கள் என்றும் பிரிக்க முடியாத இரட்டையர்கள்” என்று இந்தச் சகோதரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
