ஒரு சாதாரண அரசு அலுவலக உதவியாளர் (பியூன்), கடந்த 8 ஆண்டுகளாக அரசு நிதியை நூதன முறையில் கையாடல் செய்து 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்ட பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக (பியூன்) பணியாற்றி வருபவர் இல்ஹாம் ஷம்சி என்ற ரஹ்மான். கடந்த 8 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வரும் இவருக்கு, அலுவலகத்தின் வரவு-செலவு நடைமுறைகள் அத்துப்படி.
இதனால் அலுவலகத்தின் பணப் பரிவர்த்தனை முறையில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்ட ரஹ்மான், 2018-ம் ஆண்டு முதல் இந்த கைவரிசையைத் தொடங்கியுள்ளார். ஆசிரியர்களின் சம்பளத்திற்காக வரும் நிதியை, போலி ‘பெனிபிஷியரி ஐடி’ (Beneficiary ID) மற்றும் கருவூல டோக்கன்களை உருவாக்கி, தனது உறவினர்களின் வங்கி கணக்குகளுக்குத் ரகசியமாக மாற்றி வந்துள்ளார்.
இந்த மோசடிப் பணத்தை ரஹ்மான் தனது மூன்று மனைவிகள், மாமியார், மைத்துனி, மைத்துனரின் மனைவி மற்றும் தனது பெண் தோழிகள் என மொத்தம் 7 பெண்களின் வங்கி கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பியுள்ளார். வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 53 சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டன.
இந்த விவகாரத்தில் ரஹ்மானின் இரண்டு மனைவிகள் உட்பட 7 பெண்களைப் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இவரது ஒரு மனைவி கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளார். மொத்தம் கையாடல் செய்யப்பட்ட 8 கோடியே 15 லட்சம் ரூபாயில், 5.50 கோடி ரூபாயை போலீசார் முடக்கியுள்ளனர். மீதிப் பணத்தில் நிலம் மற்றும் சொத்துக்களை ரஹ்மான் வாங்கியது தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ரஹ்மானை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு சாதாரண பியூன் இவ்வளவு பெரிய தொகையைச் சுருட்டியது அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
