மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவகங்களில் பரிமாறப்படும் ‘பனீர்’ உண்மையானதா அல்லது போலியானதா என்பதை வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக, பல உணவகங்களில் பால் மூலம் தயாரிக்கப்படும் உண்மையான பனீருக்குப் பதிலாக, விலை குறைவான மற்றும் ஆரோக்கியத்திற்குப் புறம்பான ‘அனலாக் பனீர்’ போன்ற பால் அல்லாத மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதனைத் தடுக்கும் பொருட்டு, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் பனீர் குறித்த விவரங்களை மெனு கார்டுகளிலோ அல்லது தகவல் பலகைகளிலோ தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் உண்ணும் உணவு என்ன தரத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக, ‘பனீர் டிக்கா மசாலா’ போன்ற பிரபலமான உணவுகளில் கலப்படத்தைத் தவிர்க்கவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவேளை உணவகங்கள் உண்மையான பனீருக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தினால், அதை மறைக்காமல் “மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் இது குறித்து தீவிர ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு எச்சரித்துள்ளது.
