மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ரன் மழையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் இளம் வீரர் சலில் அரோரா. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய இவர், பும்ராவின் பந்துவீச்சில் அடித்த ‘நோ-லுக்’ சிக்ஸர் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்து, 300 ஸ்ட்ரைக் ரேட்டில் இவர் ஆடிய ஆட்டம், மும்பை இந்தியன்ஸ் அணியின் இமாலய இலக்கை சுலபமாக தகர்க்க உதவியது. அமிர்தசரஸைச் சேர்ந்த 23 வயதான இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், பஞ்சாப் மாநிலத்திற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவர்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் 39 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இவரை, 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து எஸ்ஆர்ஹெச் அணி சரியான முதலீட்டை செய்துள்ளது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
