தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக மோசமாக உள்ள நிலையில், அதனை வரலாற்று சாதனை என தி.மு.க. அரசு கூறிக்கொள்வது ஏமாற்று வேலை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள 37,554 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 முதல் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 27 வரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 31,336 பள்ளிகளில் முதலாம் வகுப்பில் வெறும் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதாவது ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனைச் சாதனை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த ஆண்டு 3 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.79 லட்சம் பேரே சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்த தி.மு.க. அரசு, கடந்த ஆண்டை விடக் குறைவான எண்ணிக்கையிலேயே (1.12 லட்சம்) மாணவர்களைச் சேர்த்துள்ளது. சில பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவல நிலை உள்ளது. அரசு இந்த உண்மையை மறைக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 81 மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலையில், தனியார் பள்ளிகளில் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கத் துடிப்பது அரசு பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு இல்லாததையே காட்டுகிறது. இது அரசின் தோல்வியே தவிர பெற்றோரின் தவறு அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். லட்சக்கணக்கான வகுப்பறைகளுக்கு ஆசிரியர்களே இல்லை. இத்தகைய சூழலில் தரமான கல்வி எப்படிக் கிடைக்கும்? அரசு பள்ளிகளுக்குப் புத்துயிரூட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்தி, போதிய ஆசிரியர்களை நியமிக்க சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
