இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் மரினா சனீஷ், தனது பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பொதுக் கிணற்றில் இறங்கிச் சுத்தம் செய்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கிணறு, பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.

கிணற்றின் உட்புறக் கற்கள் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், உயிருக்கு ஆபத்து என்று கருதி யாரும் உள்ளே இறங்க முன்வரவில்லை. ஆனால், பருவமழைக்கு முன்னதாகக் கிணற்றைத் தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், மரினா சனீஷ் துணிச்சலுடன் உள்ளே இறங்கி நான்கு மணி நேரம் உழைத்துச் சகதி மற்றும் கற்களை அகற்றினார்.

சுமார் 26 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஒரு தனியார் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கிணற்றைத் தான், அந்தப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் குடிநீருக்காக நம்பியுள்ளனர். கோடை காலத்திலும் வற்றாத இந்தக் கிணற்றில், மழைக் காலங்களில் கழிவுநீர் கலந்து அசுத்தமடைவது வழக்கமாக இருந்தது.

மற்றவர்கள் தயங்கியபோது, ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தானே முன்வந்து இந்த இக்கட்டான பணியைச் செய்த மரினாவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தப் பணியில் ஹரித கர்மா சேனா உறுப்பினர்களும், ஆஷா பணியாளர்களும் அவருக்கு உதவியாகச் செயல்பட்டனர்.