தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்த அமைப்பிற்கு எதிராக தவெகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நடப்புத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட விஜய், கடந்த ஏப்ரல் 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிப் பரப்புரையின் போது, “வீட்டில் உள்ள சிறுவர்கள், தங்கள் பெற்றோரை தவெகவின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் தங்கள் பெற்றோரை வற்புறுத்தி வாக்களிக்கச் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், “அரசியல் நோக்கத்திற்காக குழந்தைகளை பகடைக்காயாக பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. இது குழந்தைகளின் உளவியலை பாதிக்கும். இதற்கு விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தேவநேயன் பேசுகையில், “தேர்தல் முடிவுகள் சாதகமாக வராவிட்டால் அந்த ஏமாற்றத்தை குழந்தைகள் தாங்குவார்களா? இதற்கு யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பியுள்ளார்

இந்த கண்டனத்திற்கு தவெக தரப்பினர் மிகக் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் சரமாரி கேள்விகள் இதோ, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான போக்சோ வழக்குகளும், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளும் நடந்தபோது இந்த அமைப்பு எங்கே போனது? மது அரக்கனால் தந்தையை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்வாதாரம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

 

முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக பள்ளிக் குழந்தைகள் கொளுத்தும் வெயிலில் காக்க வைக்கப்பட்டபோது உங்கள் ‘உரிமை மீறல்’ சட்டம் எங்கே உறங்கியது? அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் காவலரின் மகள் காலை இழந்தபோது இந்த அமைப்பு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்ளாமல், முதல்முறையாக களம் காணும் விஜய் மீது மட்டும் பாய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது என தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். “அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே இந்த நாடகம்” என அவர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.