நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா சத்யராஜ் ஆகியோர் ‘லிவிங் ரிலேஷன்ஷிப்’ (Living Together) மற்றும் திருமணமின்றி குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி, “திவ்யா சத்யராஜ் பேசியது சில ஆயிரங்களை சென்றடைந்திருக்கலாம், ஆனால் ஒரு பெரியாரியவாதியாக அறியப்படும் சத்யராஜ் சார் அதை ஆதரித்துப் பேசியது ஒரு கோடி பேரையாவது சென்றடைந்திருக்கும்.
தாலி, மோதிரம், சடங்குகள் போன்ற எந்த பந்தமும் இல்லாமல் புடிச்சவங்க கூட வாழ்ந்துக்கலாம், சயின்டிஃபிக் முறையில் கல்யாணம் இல்லாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற அபத்தமான கருத்துக்களை இவர்கள் விதைப்பது மிகவும் ஆபத்தானது” எனச் சீறியுள்ளார். மேலும், செல்வந்தர்களாக இருப்பவர்கள் இத்தகைய முடிவுகளை எடுப்பது எளிது எனச் சுட்டிக்காட்டிய மோகன் ஜி, “உங்களை போன்றவர்களுக்குக் குறைந்தது 25 கோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கும், சொத்துக்கள் இருக்கும். உங்களால் ஒரு குழந்தையை யாரின் ஆதரவும் இன்றி மூன்று, நான்கு வேலைக்காரர்களை வைத்து வளர்த்துவிட முடியும்.
ஆனால், உங்களது இந்த பேச்சால் கவரப்பட்டு ஒரு சாமானியப் பெண், ஒரு ஆணை நம்பி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு, பின்னர் அவர் கைவிட்டுப் போனால் அந்தப் பெண்ணின் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா? ஒரு மாத சம்பளத்தில் வாழும் ஒரு பெண், சிங்கிள் பேரண்ட்டாக குழந்தையை வளர்ப்பது எவ்வளவு பெரிய சித்ரவதை என்பது எதார்த்தமான சமூகத்தில் வாழ்பவர்களுக்குத்தான் தெரியும்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். இறுதியாக, 2000-ம் ஆண்டுக்குப் பின் பிறந்த ‘ஜென்சி’ (Gen Z) பெண்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோளை மோகன் ஜி விடுத்துள்ளார். “சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக இதுபோன்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர்கள்.
Director Mohan G | "அந்த கருத்து தப்பு சார்" இயக்குனர் மோகன் ஜி திடீர் வீடியோ வெயியீடு#mohang |#thanthitv | #sathyaraj | #divyasathyaraj pic.twitter.com/IwvieqPLlE
— Thanthi TV (@ThanthiTV) April 28, 2026
இது கலாச்சாரம், பண்பாடு என்பதையெல்லாம் தாண்டி ஒரு குழந்தையின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். திருமணப் பந்தம் இல்லாமல் ஒரு குழந்தையை வளர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து உங்கள் நலம் விரும்பிகளிடமோ அல்லது ஒரு மருத்துவரிடமோ ஆலோசனை பெற்று, அதன் பின்விளைவுகளைப் புரிந்துகொள்ளுங்கள். சினிமாவில் யாரும் இவர்களை எதிர்த்துக் கேட்கமாட்டார்கள் என்பதால், சில லட்சக்கணக்கான மக்களுக்காவது உண்மை போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே இதைப் பேசுகிறேன்” என அவர் எச்சரித்துள்ளார்.
