அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ஆனால், அந்தப் பதற்றமான சூழலில் பெண் ஒருவர் மேஜையில் இருந்த மதுபாட்டில்களைத் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில், டொனால்ட் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிபரையும் அவரது மனைவியையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். விருந்தினர்கள் அனைவரும் மேஜைகளுக்கு அடியில் பதுங்கியும், பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியும் உயிர் தப்பினர்.

ஆனால், இந்த களேபரத்திற்கு நடுவே கருப்பு நிற கோட் அணிந்த பெண் ஒருவர், மேஜையில் இருந்த ஷாம்பெயின் மற்றும் ஒயின் பாட்டில்களை மிகவும் நிதானமாகத் தனது பையில் எடுத்து வைக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒல்கா ஸ்டெபானிஷின என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. எனினும், அந்தப் பெண் ஒல்கா அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஒல்கா ஸ்டெபானிஷினா வெள்ளி நிற உடையில் இருந்ததும், வீடியோவில் இருக்கும் பெண் கருப்பு நிற உடையில் இருப்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒல்கா தனது முகநூல் பக்கத்தில், “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், உக்ரைன் குழுவிற்கு அருகில் இருந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அமெரிக்க எம்.பி டிம் பர்ச்செட், “துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்று நமக்குத் தெரியும், ஆனால் மதுபானங்கள் வீணாகாமல் பார்த்துக் கொண்ட அந்தப் பெண் யார் என்று இன்னும் தெரியவில்லை” என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் (Cole Tomas Allen) என்ற 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அதிபரைக் கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தாலும், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.