உலகின் பெரும் பணக்கார நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில், வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் தங்களின் வாராந்திர விடுமுறை நாளில் போதிய இடவசதி இல்லாமல் வீதிகளில் அட்டைப் பெட்டிகளுக்குள் தஞ்சமடையும் அவலநிலை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹாங்காங் சட்டப்படி, வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் வீடுகளிலேயே தங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால் அவர்களுக்கு எனத் தனியாகச் சுதந்திரமான இடம் இருப்பதில்லை.
View this post on Instagram
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில், அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான இந்தோனேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளில் அட்டைப் பெட்டிகளை வைத்து சிறிய ‘தற்காலிக அறைகளை’ உருவாக்கி அங்கேயே ஓய்வெடுக்கின்றனர்.
சொகுசு வீடுகளைத் தூய்மைப்படுத்தும் இவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வின் போது கூட முறையான இடவசதி வழங்காதது அந்த நகரின் மிகப்பெரிய “பணக்கார-ஏழை” இடைவெளியைக் காட்டுவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானியப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ, ஹாங்காங்கில் மறைந்திருக்கும் ஒரு மனித உரிமைச் சிக்கலை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
