மனித வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 29 வயது விவசாயி ஒருவருக்கு, கழுத்தின் பின்னால் ஏற்பட்ட ஒரு சிறிய சதை வளர்ச்சி, அவரை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்ற சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அந்த வாலிபரின் கழுத்தில் எலுமிச்சை பழம் அளவிலான ஒரு சிறிய கட்டி தோன்றியது. ஆரம்பத்தில் சாதாரணமாகக் கருதி அவர் அதனை அலட்சியப்படுத்தினார். ஆனால், காலம் செல்லச் செல்ல அந்தக் கட்டி அசுர வேகத்தில் வளர்ந்து, மூன்று ஆண்டுகளில் 25 கிலோ எடையுள்ள ஒரு கட்டியாக மாறியது.
இந்த விசித்திரமான கட்டியால், அந்த வாலிபரின் தோற்றமே மாறிப்போனது. அவரால் சாதாரண ஆடைகளை அணிய முடியாமலும், நண்பர்களுடன் பழக முடியாமலும் போனது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விவசாயத்தையும் விட்டுவிட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கினார்.
மருத்துவர்கள் இதனை ‘லிப்போமா’ (Lipoma) என்று அழைக்கிறார்கள். இது தோல் மற்றும் தசைக்கு இடையே கொழுப்பு படிவதால் ஏற்படும் ஒரு கட்டியாகும். பொதுவாக இவை 10 சென்டிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் வழக்கில் அது 25 கிலோவாக வளர்ந்து உலக அளவில் ஒரு அபூர்வ மருத்துவ நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
நாட்கள் செல்லச் செல்ல அந்த வாலிபருக்குப் பசி குறைந்து, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டது. பொருளாதார வசதி இல்லாததால் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்த அவருக்கு, அந்தக் கட்டியில் புண்கள் ஏற்படத் தொடங்கின. உள்ளூர் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், ஒரு பெரிய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கழுத்தின் மிக நுட்பமான நரம்புகளுக்கு அருகில் இந்தக் கட்டி இருந்ததால், இதற்கான அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இருப்பினும், திறமையான மருத்துவர்கள் குழு பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த 25 கிலோ மாமிசக் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சை முடிந்து நான்கே நாட்களில் அந்த வாலிபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது முழு ஆரோக்கியத்துடன் உள்ள அவர், மீண்டும் தனது விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளார். “இத்தனை காலம் வேறொருவரின் உடலில் சிக்கிக்கொண்டது போல உணர்ந்தேன். இப்போதுதான் என் பழைய உடலைப் பெற்றது போல இருக்கிறது. பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த என் பழைய ஆடைகளை மீண்டும் அணிவது மகிழ்ச்சியாக உள்ளது,” என அந்த விவசாயி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மருத்துவ உலகில் ‘லிப்போமா’ இவ்வளவு பிரம்மாண்டமாக வளர்ந்தது மிக அரிதான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
