எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை.

தற்போது மறு தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்ட போதிலும், ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம மக்கள் இந்தப் படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தங்கள் கிராமத்தில் 1996 முதல் 2006 வரை நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து படத்தில் தவறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தத் தவறான காட்சிகளை நீக்கக்கோரி கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ‘ஜனநாயகன்’ படத்திற்குப் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.