மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்களின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த தவறான வதந்திகளுக்கு நடிகர் இளவரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மயில்சாமி கடந்த 2023-ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானபோது, அவர் மதுப்பழக்கத்தால் தான் இறந்தார் என்று பலரும் விமர்சித்தனர்.

ஆனால், “சினிமாக்காரர்கள் நடுத்தர வயதில் இறந்தாலே குடிப்பழக்கம் தான் காரணம் என்று சொல்வது தவறு; மயில்சாமியின் மரணத்திற்கு கட்டுப்பாடற்ற உணவுமுறை தான் காரணமே தவிர குடிப்பழக்கம் அல்ல” என்று இளவரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான மயில்சாமி, தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது உதவும் குணம் கொண்டவர். நாகப்பட்டினத்தில் உதவி செய்த நடிகர் விவேக் ஓபராயின் சேவையைக் கண்டு வியந்து, தான் கழுத்தில் அணிந்திருந்த விலைமதிப்பற்ற எம்.ஜி.ஆர் டாலர் கொண்ட தங்கச் செயினையே கழற்றி பரிசாகக் கொடுத்தவர் அவர்.

மயில்சாமியின் மனிதாபிமானத்தைப் போற்றும் வகையில் இளவரசு பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.