கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த அன்றே இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட ‘லவ் ஜிகாத்’ நடவடிக்கை என பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதாவது சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரம்மா (24). பி.காம் பட்டதாரியான இவர், தனியார் அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது, ந இப்ராஹிம் நெகளூரு என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி ஜோடியாகச் சுற்றி வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சங்கரம்மாவின் வீட்டாருக்குத் தெரிய வந்ததையடுத்து, மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்யப் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டித்துள்ளனர்.
மகளின் காதலை முறிக்க நினைத்த பெற்றோர், அவருக்கு அவசரமாக வேறு ஒரு வரன் பார்த்துத் திருமணத்தை உறுதி செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இருவருக்கும் கோலாகலமாகத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் மே மாதம் 11-ஆம் தேதி திருமணம் நடத்தவும் நாள் குறிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் முடிந்த அன்றிரவு, தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிய சங்கரம்மா, அனைவரும் தூங்கிய பிறகு தனது காதலன் இப்ராஹிமை வரவழைத்து அவருடன் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று காலை தனது மகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரைப் பல்வேறு இடங்களில் தேடினர். இறுதியில் அவர் காதலனுடன் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சங்கரம்மாவின் பெற்றோர், “எங்கள் மகளை இப்ராஹிம் ‘லவ் ஜிகாத்’ முறையில் ஆசை வார்த்தைகளைக் கூறி, திட்டமிட்டு கடத்திச் சென்றுள்ளார்,” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான காதலர்களைத் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் இரு மதத்தினரிடையே மோதலாக உருவெடுக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தலைமறைவாக உள்ள ஜோடியை விரைந்து பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இளம்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
