தமிழ் திரையுலகில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தயாரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்த, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமான அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, இனி வரும் காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ‘Revenue Share’ (வருவாய் பகிர்வு) அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முன்கூட்டியே பெரிய தொகையைச் சம்பளமாகப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையைத் திரையுலகினர் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில், வரும் மே 2-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி முடிவால் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் ரிலீஸ் தேதிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், கோலிவுட் வட்டாரமே இப்போ பதற்றத்தில் உள்ளது.
