உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 23 வயதே ஆன பயிற்சி வழக்கறிஞர் பிரியான்ஷு ஸ்ரீவஸ்தவா, நீதிமன்ற வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
தனது மரணத்திற்குத் தந்தை ராஜேந்திர ஸ்ரீவஸ்தவா அளித்த கடும் மன உளைச்சலே காரணம் என 1,000 வார்த்தைகள் கொண்ட உருக்கமான கடிதத்தை அவர் எழுதி வைத்துள்ளார். அதில், 6 வயது சிறுவனாக இருந்தபோது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஜூஸ் குடித்ததற்காக, தந்தை தனது உடைகளைக் களைந்து வீட்டை விட்டு வெளியே துரத்தியது முதல் தான் அனுபவித்த நரக வேதனைகளை ரத்தக் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
படிப்பில் சுட்டியாக இருந்தும், தந்தையின் அதீத கட்டுப்பாடுகள் மற்றும் சந்தேகப் பார்வையால் தனது வாழ்க்கை மூச்சுத்திணறியதாக பிரியான்ஷு குறிப்பிட்டுள்ளார். 9-ம் வகுப்பில் விருப்பமில்லாத பாடத்தைத் திணித்தது, தேர்வில் மதிப்பெண் குறைந்தால் நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என மிரட்டியது எனத் தந்தையின் ஒவ்வொரு செயலும் தன்னை மனதளவில் சிதைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட பயத்தில் ஒருமுறை வீட்டை விட்டு ஓடி மதுரா வரை சென்றதாகவும், பின்னர் குடும்பத்திற்காகச் சொந்தமாக இணைய வணிகம் செய்து வருமானம் ஈட்டியும் தந்தை தன்னை மதிக்கவில்லை என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நிலையிலும், தனது தந்தை தன்னை “ஆண்மையற்றவன், அலி” என இழிவான வார்த்தைகளால் அண்டை வீட்டார் முன்னிலையில் வசைபாடியது தன்னை நிலைகுலையச் செய்ததாக பிரியான்ஷு வேதனை தெரிவித்துள்ளார். “நான் யாருக்காக 24 மணி நேரமும் உழைத்தேனோ, அவர்களே என்னை ஒரு பொய்யன் எனச் சொல்லி அவமானப்படுத்தினார்கள்.
என் வாழ்க்கையில் தேவையற்ற தலையீடுகள் அதிகம். இன்று என் தந்தை ஜெயித்துவிட்டார், நான் தோற்றுப் போய்விட்டேன்” என விரக்தியின் உச்சத்தில் அவர் அந்த கடிதத்தை முடித்துள்ளார்.
இந்தத் தற்கொலைக் கடிதத்தில் அவர் முன்வைத்துள்ள கடைசி கோரிக்கை காண்போரை அதிர வைத்துள்ளது. “பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கண்டிப்புடன் இருக்கலாம், ஆனால் அது பிள்ளைகள் மூச்சுத்திணறும் அளவுக்கு இருக்கக் கூடாது. தயவுசெய்து என் தந்தை எனது பிணத்தைத் தொடக் கூடாது; கடவுள் யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு தந்தையைத் தரக்கூடாது” எனத் தனது கடைசி ஆசையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது தாய்க்கும் சகோதரிக்கும் முத்தங்களை வழங்கிய அந்த இளைஞர், இறுதியில் நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து குதித்து தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, வளர்ப்பு முறை (Parenting) குறித்த பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
