நவீன உலகில் அடிமைத்தனத்தின் மற்றுமொரு முகம் சிங்கப்பூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு பணிபுரியும் வீட்டுப் பணியாளர் ஒருவருக்குப் போதிய உணவு வழங்காமல், அவரது உரிமைகளைப் பறித்து உரிமையாளர் கொடுமைப்படுத்தி வரும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் வீட்டுப் பணியாளர்களுக்கான முகநூல் குழு ஒன்றில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி ஒருவர் பெயரிடாமல் இந்தப் புகாரைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எனது தோழி சிங்கப்பூர் வந்து 3 மாதங்கள் ஆகிறது. அவர் கடும் துயரத்தில் இருக்கிறார். காலை 5 மணிக்குத் தொடங்கும் அவரது வேலை இரவு 9:30 மணி வரை நீடிக்கிறது. இவ்வளவு வேலை வாங்கும் உரிமையாளர், அவருக்கு மிகச் சொற்பமான உணவையே வழங்குகிறார். அந்த உணவின் புகைப்படம் இதோ. இது பத்தவில்லை என்றால் தனது சொந்தப் பணத்தில் வாங்கிச் சாப்பிடுமாறு உரிமையாளர் கூறுகிறார்.

உணவு மட்டுமின்றி, கழிவறை காகிதம், சோப்பு, ஷாம்பு போன்ற அடிப்படைத் தேவைகளையும் அந்தப் பெண்ணே வாங்க வேண்டும் என உரிமையாளர் கட்டாயப்படுத்துகிறார். மேலும், அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை ஏஜென்ட் நேரடியாக உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். பாஸ்போர்ட்டைத் தன்னிடம் தருமாறு கேட்டால் உரிமையாளர் மறுப்பதோடு, இது குறித்துப் பேசவும் முன்வருவதில்லை. வந்த முதல் நாளே கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் அந்தப் பெண் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அளவு உணவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “செல்லப் பிராணிகளுக்குக் கூட இதைவிட நல்ல உணவை மக்கள் வழங்குகிறார்கள்; இது மனிதநேயமற்ற செயல்” எனக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் சட்டப்படி பணியாளரின் பாஸ்போர்ட்டை உரிமையாளர் வைத்திருப்பது சட்டவிரோதமானது. இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவப் பல தன்னார்வ அமைப்புகள் முன்வந்துள்ளன. இந்தப் புகார் குறித்துத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.