மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இசைப் பள்ளியில் முதுகலை படித்து வந்த ரேணுகா (25) என்ற புல்லாங்குழல் கலைஞர், மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சமூக வலைதளம் மூலம் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சாமியாரை ரேணுகா தொடர்பு கொண்டுள்ளார்.
அந்தப் போலி சாமியார், பரிகார பூஜைகள் செய்வதாகக் கூறி ரேணுகாவிடம் இருந்து சுமார் 74 ஆயிரம் ரூபாயைப் பறித்துள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியதோடு, பணம் தராவிட்டால் அவருக்கும் அவரது தாய்க்கும் ஆபத்து ஏற்படும் என்று மாந்திரீக ரீதியாகப் பயமுறுத்தியுள்ளார்.
சாமியாரின் தொடர் மிரட்டலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரேணுகா, கடந்த 6-ஆம் தேதி தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், போலி சாமியாரின் பணத்தாசையும் மிரட்டலுமே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் போலி சாமியாரைப் பிடிக்க புனே போலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர். ஒரு இளம் கலைஞரின் உயிர் போலிச் சாமியாரால் பறிபோனது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
