தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் சிலர், தங்களது ஜனநாயகக் கடமையான வாக்களிப்பைப் பதிவு செய்யாதது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று நடைபெற்ற தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யவில்லை. கரூர் தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள அவர், தேர்தல் நாளன்று காலை கரூர் சென்று வாக்களித்துவிட்டு கோவை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கோவை தெற்கு தொகுதியில் வெற்றியை உறுதி செய்யவும், வாக்குப்பதிவின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது பதற்றம் ஏற்பட்டால் அதைத் களத்தில் இருந்து கையாளவும் அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் கரூர் செல்லாமல் கோவையிலேயே முகாமிட்டிருந்தார்.
இதேபோல், பா.ம.க. தரப்பில் போட்டியிட்ட திலகபாமாவும் தனது வாக்கைப் பதிவு செய்யவில்லை. அவர் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்ததால், தனது சொந்தத் தொகுதியான சிவகாசிக்குச் சென்று வாக்களிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடம் “கட்டாயம் வாக்களிக்க வேண்டும்” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேட்பாளர்களே, தேர்தல் பணி என்ற காரணத்தைச் சொல்லி வாக்களிக்கச் செல்லாதது முறையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “தொகுதியின் முக்கியத்துவத்தைக் கருதி, வேட்பாளர் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்கவே அவர் கோவையில் தங்கியிருந்தார்” எனத் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு வேட்பாளரே தனது ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுத்தது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
