வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையைத் தகர்த்து, ஈரானின் 34 கப்பல்கள் துணிச்சலாகப் பயணித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இந்த நெருக்கடியான சூழலிலும், ஈரானின் 19 கப்பல்கள் வளைகுடாவிலிருந்து வெளியேறியுள்ளன, அதே சமயம் 15 கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து ஈரான் நோக்கி வளைகுடாவுக்குள் நுழைந்துள்ளன. இந்தக் கப்பல்களில் சுமார் 1.07 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சர்வதேச தடைகள் காரணமாக, ஈரான் தனது கச்சா எண்ணெயை உலக சந்தை விலையை விட பீப்பாய்க்கு 10 டாலர் குறைவாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ஈரானுக்கு சுமார் 8,436 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கடுமையான எச்சரிக்கைகளையும், பொருளாதாரத் தடைகளையும் மீறி ஈரான் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, மேற்காசியப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.