தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் அஜித் குமார் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசியதாகப் பரவி வரும் தகவல்களுக்கு, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பொதுமக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து முதல் நபராகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வழக்கம்போல எளிமையாக வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றிய அவரைப் பார்க்க ரசிகர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது, அவரிடம் அரசியல் மாற்றம் அல்லது ஆட்சி மாற்றம் குறித்துக் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் ‘நோ நீட்’ (No Need – தேவையில்லை) என்று பதிலளித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இது அஜித்தின் அரசியல் நிலைப்பாடாகப் பார்க்கப்பட்டு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாவது, நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாகப் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது. அவர் அரசியல் தொடர்பான எந்த ஒரு கருத்தையும் வாக்குச்சாவடியில் வெளியிடவில்லை. இது போன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் முன்னணி நடிகர்களின் பெயரில் வெளியாகும் இது போன்ற தகவல்கள் குழப்பத்தை விளைவிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
