“வாரிசு அடிப்படையில் வழங்கப்படும் வேலை என்பது தனிநபர் பெற்ற சொத்தோ அல்லது பரிசோ அல்ல; அது பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் காப்பதற்கான ஒரு வாழ்வாதாரம்” என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. தனது மாமியாரைப் பராமரிக்கத் தவறும் பட்சத்தில் மருமகளின் வேலை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அதாவது அம்பிகாபூரைச் சேர்ந்தவர் ஜியாந்தி திவாரி. இவரது கணவர் கன்ஷியாம் திவாரி காவலராகப் பணியாற்றி 2001-இல் காலமானார். அதைத்தொடர்ந்து, அவரது மகன் அவினாஷ் திவாரிக்கு வாரிசு அடிப்படையில் காவலர் பணி கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவினாஷும் கடந்த 2021-ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார்.

இதையடுத்து, அவினாஷின் மனைவி நேஹா திவாரிக்கு, “தனது வயதான மாமியாரை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் அரசு வாரிசு வேலை வழங்கியது. வேலை கிடைத்த சில நாட்களிலேயே நேஹா திவாரியின் அணுகுமுறை மாறியதாகக் கூறப்படுகிறது. தனது மாமியாரைக் கவனிக்காமல் கைவிட்டதுடன், அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் ஜியாந்தி தேவி குற்றம் சாட்டினார். உணவிற்கே வழியின்றி தவித்த அந்த முதியவர், நீதிக்காக உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் தலைமையிலான அமர்வு, மருமகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டதாவது, வாரிசு வேலை என்பது இறந்தவரின் குடும்பம் முழுவதையும் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பதற்காகவே வழங்கப்படுகிறது. வேலை பெறும்போது மாமியாரைக் கவனிப்பதாக நேஹா திவாரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். கணவனுக்குப் பதிலாக வேலை பெற்றிருப்பதால், ஒரு மகனுக்குத் தன் தாயின் மீது இருக்கும் அதே சட்டப்பூர்வக் கடமை மருமகளுக்கும் பொருந்தும்.

அரசின் கொள்கைப்படி, வாரிசு வேலை பெற்ற ஒருவர் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் பராமரிக்கத் தவறினால், அவரது பணியை ரத்து செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் தனது மாமியாரை உடனடியாகப் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் நேஹா திவாரியின் வேலை பறிக்கப்படும் என்றும் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தீர்ப்பு வாரிசு வேலை பெற்றுக்கொண்டு முதியவர்களைக் கைவிடும் பலருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.