அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை பெரும் சிக்கலில் உள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தயாராக இருந்தபோதும், ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா தாக்கிப் பிடித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான பகையை மீண்டும் கிளப்பியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயக்கம் காட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் பணிந்து வராவிட்டால் கடும் குண்டுவீச்சு தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரானும் தனது படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதால் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
ஈரானின் இந்த பிடிவாதமான நிலைக்குப் பின்னணியில் அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பலனளிக்காது என ஈரான் கருதுகிறது. இதற்கிடையில், ஓமான் வளைகுடாவில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களை நிறுத்தி ஈரானியக் கப்பல்களைக் கண்காணித்து வருகிறது.
ஈரான் தனது கப்பலை விடுவிக்கக் கோரி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், எகிப்து மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்து வருகின்றன. தற்போதைய சூழலில், நாளை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான போரைத் தடுக்குமா அல்லது வெறும் சடங்காக முடியுமா என்பது உலக நாடுகளிடையே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
