திருச்செந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயன்ற மோடி அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று தெரிவித்தார்.
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை எதிர்த்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கறுப்புக்கொடி ஏந்தி ‘கறுப்பு நாள்’ அறிவித்ததை அவர் நினைவு கூர்ந்தார். தான் கொண்டு வந்த மசோதா நாடாளுமன்றத்தில் எடுபடாமல் போனதால் பிரதமர் மோடி தற்போது தோல்வி பயத்தில் புலம்பிக் கொண்டிருப்பதாக கனிமொழி சாடினார்.
