இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நாசிக் கிளை, இப்போது ஒரு பயங்கரமான குற்றச்சாட்டால் நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு பணியாற்றிய சுமார் 6-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த வாக்குமூலத்தில், திருமணமான தன்னை “பிளேயர்” மற்றும் “ஜீரோ பிகர்” என சக ஆண் ஊழியர்கள் கிண்டல் செய்ததாகவும், தனது கணவர் வெளியூரில் இருப்பதைச் சாதகமாக்கி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ரசா மேனன் என்ற டீம் லீடர், அந்தப் பெண்ணின் சேலையைப் பிடித்து இழுத்ததாகவும், ஆசிப் அன்சாரி என்பவர் அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளைத் தொட்டு ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “இது கார்ப்பரேட் ஜிகாத் போலத் தெரிகிறது, இது மிகவும் தீவிரமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாசிக் போலீசார் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து, இதில் தொடர்புடைய ஒரு பெண் மேலாளர் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, டிசிஎஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால், “எங்கள் புகார் பெட்டிகளில் இதுபோன்ற புகார்கள் வரவில்லை” என நிறுவனம் மழுப்பலாகக் கூறியுள்ளது.
மறுபுறம், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் இது ஒரு திட்டமிட்ட சதி என்று கூறி வருகின்றனர். ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சம்பவம் இப்போது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
