அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வெறும் ‘பழி சுமத்தும் விளையாட்டை’  விளையாடி வருவதாகவும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டிற்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறுதல், கடல்சார் தடைகளை ஏற்படுத்துதல் மற்றும் ஈரானிய வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற அடுக்கடுக்கான புகார்களை அமெரிக்கா மீது ஈரான் முன்வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறிப்பாக, லெபனான் தொடர்பான உடன்படிக்கைகளை அமெரிக்கா முறையாகப் பின்பற்றவில்லை என்றும், ஈரானியத் தொழிலதிபரின் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் வழியாகத் தனது எதிர்ப்புகளைத் தெரிவித்தும் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்று ஈரான் கருதுகிறது.

இந்நிலையில் தங்கள் நாட்டு நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்கா தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் வரை புதிய பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதே ஈரானின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.