தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், அடையாள அட்டை இல்லாவிட்டாலும் மாற்று ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். அதன்படி, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றை அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம்.

மேலும், ஓய்வூதிய ஆவணம், அரசுப் பணியாளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.