விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அதன் காக்பிட் (Cockpit) ஜன்னல் கண்ணாடிகள் மீது விமானி ஒருவர் சோடா போன்ற திரவத்தை ஊற்றித் துடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும், “விமானத்தை சுத்தம் செய்ய குளிர்பானங்களைப் பயன்படுத்துவார்களா?” என்று வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வீடியோவில், விமானி மிகவும் நிதானமாக ஒரு பாட்டில் திரவத்தை கண்ணாடியின் மீது ஊற்றி, அதைத் துடைப்பத்தைக் காண முடிகிறது. சர்க்கரை கலந்த குளிர்பானத்தை ஊற்றினால் கண்ணாடி பிசுபிசுப்பாகி விடுமே என்ற அச்சமும் பலரிடம் எழுந்தது. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜோய் ஸ்விட்சர் என்ற அனுபவம் வாய்ந்த பெண் விமானி விளக்கமளித்துள்ளார். “அந்த விமானி பயன்படுத்துவது சர்க்கரை கலந்த சோடா (Soft Drink) அல்ல; அது வெறும் ‘சோடா வாட்டர்’ மட்டுமே. இதில் சர்க்கரை இல்லாததால் பிசுபிசுப்பு ஏற்படாது” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏன் இந்த வினோதமான முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு அவர் சில காரணங்களையும் கூறியுள்ளார். அதாவது சோடா வாட்டரில் உள்ள ‘கார்போனிக் அமிலம்’ (Carbonic acid), கண்ணாடியில் ஒட்டியுள்ள அழுக்குகள், பூச்சிகளின் எச்சங்கள் மற்றும் பறவைகளின் கழிவுகளை எளிதாக அகற்ற உதவுகிறது. இது விமானக் கண்ணாடியில் உள்ள விசேஷப் பூச்சுகளை (Coating) சேதப்படுத்தாது.
இது குறித்து ஸ்விட்சர் கூறுகையில், “இது விமானத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை கிடையாது. எந்தப் பயிற்சிப் புத்தகத்திலும் இது இடம் பெறவில்லை. ஆனால், விமானம் புறப்படத் தயாராக இருக்கும் வேளையில், தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் வரத் தாமதமானால், அனுபவம் வாய்ந்த விமானிகள் தங்களின் சமயோசித புத்தியைப் பயன்படுத்திப் பின்பற்றும் ஒரு பழைய காலத்து உத்தி இது” என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இனி நானும் என் கார் கண்ணாடியைத் துடைக்க இதைப் பயன்படுத்தலாமா?” என்றும், “நான் ஏற்கனவே கோக் அல்லது பெப்சி கொண்டு கார் கண்ணாடியைத் துடைத்திருக்கிறேன்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விமானப் பயணத்தில் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், ஜன்னல்கள் தெளிவாக இருப்பதை உறுதி செய்ய விமானிகள் மேற்கொள்ளும் இத்தகைய ‘சமயோசித நடவடிக்கைகள்’ தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
