லண்டன் வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற ‘சைட்மென்’ (Sidemen) அறக்கட்டளை கால்பந்து போட்டியில், பிரபல யூடியூபர் ஒருவர் நடுவர் காட்டிய மஞ்சள் அட்டையை தீயிட்டு எரித்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘யூடியூப் ஆல் ஸ்டார்ஸ்’ அணிக்காக விளையாடிய பிரபல யூடியூபர் மேக்ஸ் ஃபோஷ் (Max Fosh), போட்டியின் போது எதிரணி வீரர் மார்லன் கிரேசியாவை தடுத்தார். இதற்காக நடுவர் மார்க் கிளாட்டன்பர்க் அவருக்கு ‘மஞ்சள் அட்டை’ (Yellow Card) காட்டினார்.

பொதுவாக நடுவரின் முடிவை வீரர்கள் எதிர்ப்பார்கள். ஆனால், மேக்ஸ் ஃபோஷ் ஒரு படி மேலே போய், நடுவர் நீட்டிய மஞ்சள் அட்டையை வாங்கி காற்றில் அசைத்தவாறே அதற்கு தீ வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த அட்டை எரிந்து சாம்பலானது. இதைக் கண்டு மைதானத்தில் இருந்த 90,000 ரசிகர்களும், நேரலையில் பார்த்த 16 லட்சம் மக்களும் திகைத்துப் போயினர்.

இந்த மேஜிக் குறித்து மேக்ஸ் ஃபோஷ் கூறுகையில், “இந்த சாகசத்தை தயார் செய்ய எனக்கு வெறும் 6 நாட்கள் மட்டுமே கிடைத்தன. வீட்டில் பயிற்சி செய்தபோது 50 சதவீத முறையே இது வெற்றிகரமாக அமைந்தது. ஆனால், வெம்பிளி மைதானத்தில் சரியாகச் செய்து முடித்ததில் மகிழ்ச்சி,” என்றார். கடந்த 2023-ல் நடுவரிடம் ‘யூனோ ரிவர்ஸ்’  கார்டு காட்டியும், 2025-ல் மஞ்சள் அட்டையை இயந்திரத்தில் போட்டு கிழித்தும் இவர் ஏற்கனவே வைரலானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 10 கோல்கள் அடித்து சமநிலை வகித்தன. இது சைட்மென் அறக்கட்டளை போட்டி வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக அமைந்தது. இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-1 என்ற கணக்கில் ‘யூடியூப் ஆல் ஸ்டார்ஸ்’ அணி வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

விளையாட்டையும் தாண்டி, சமூக நலனுக்காக நிதி திரட்டுவதே இப்போட்டியின் முக்கிய நோக்கம். ‘பிரைட் சைட்’ மற்றும் ‘எம்7 எஜுகேஷன்’ போன்ற தொண்டு நிறுவனங்களுக்காக இந்தப் போட்டியின் மூலம் சுமார் 65 கோடி ரூபாய் (6.2 மில்லியன் யூரோ) நிதி திரட்டப்பட்டது. கடந்த ஆண்டை (ரூ.50 கோடி) விட இது மிக அதிகமாகும். மேலும் இணையதளக் கலைஞர்களின் தாக்கம் வெறும் திரையோடு மட்டும் நின்றுவிடாமல், சமூக மாற்றத்திற்கும் வித்திடுகிறது என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.