கேரள மாநிலம் கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவர் நிதின் ராஜ், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்லூரி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது தாயின் மருத்துவச் செலவிற்காக ஆன்லைன் லோன் ஆப் மூலம் நிதின் வாங்கிய ₹13,500 கடன், அவரது உயிரையே பறிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது.
விசாரணையில், தற்கொலைக்கு முந்தைய நாள் மட்டும் நிதினுக்கு அந்த லோன் ஆப் ஊழியர்களிடமிருந்து 96 முறை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, நிதின் பரிந்துரை பெயராகக் கொடுத்திருந்த அவரது ஆசிரியை டாக்டர் லதாவிற்கும் 26 முறை போன் செய்து அந்த கும்பல் ஆபாசமாக மிரட்டியுள்ளது.
இதனால் மனமுடைந்த நிதின், கல்லூரி முதல்வர் முன்னிலையில் செல்போன் ஒப்படைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்திய கேரளா போலீசார், நொய்டாவில் பதுங்கியிருந்த ரிஷிகேஷ் திவாரி, பிரசாந்த் கேவல் மற்றும் பிரகாஷ் ஜே ஆகிய 3 லோன் ஆப் ஊழியர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சட்டவிரோத லோன் ஆப் மூலம் மிக அதிக வட்டி வசூலித்து, கடன் வாங்குபவர்களின் தொடர்புகளைத் திருடி மிரட்டி வந்தது அம்பலமாகியுள்ளது. நிதினின் மரணத்திற்குச் சாதி ரீதியான அவமதிப்புகளும் ஒரு காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்த லோன் ஆப் கைது நடவடிக்கை முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
