பெரம்பூர் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம், “மாதம் ஒருமுறை வந்து மக்களைப் பார்ப்பேன்” என்று சொன்ன நடிகர் விஜய்யை மிகக் கடுமையாக விளாசியுள்ளார். “அரசியல் என்பது ஒன்றும் மாதம் ஒருமுறை கட்ட வேண்டிய இன்ஸ்டால்மென்ட் (Installment) கிடையாது; மாதம் ஒருமுறை வந்து பார்ப்பேன் என்று சொல்வது மக்களுக்குப் பிச்சை போடுவது போன்றது” என்று அவர் பொளேர் எனப் பேசினார். சினிமாவிற்கு வேண்டுமானால் கால்ஷீட் கொடுத்துவிட்டு வந்து போகலாம், ஆனால் அரசியல் என்பது 24 மணி நேரமும் மக்களுடன் இருக்க வேண்டிய மக்கள் சேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

​தாஜ் ஹோட்டல் ஏசி அறையில் அமர்ந்து மேனிஃபெஸ்டோ வெளியிடுவதுடன் அரசியல் முடிந்துவிடாது என்று சாடிய வினோஜ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக நான்கு வீடுகளுக்குப் போய் வருவதெல்லாம் உண்மையான அரசியல் ஆகாது என்று கிண்டலடித்தார். சினிமாவில் கை தட்டினார்கள் என்பதற்காக மக்கள் அரசியலில் வாக்களித்துவிட மாட்டார்கள் என்றும், மக்களுக்காக 24/7 உழைக்கும் பண்பு கொண்டவர்களையே மக்கள் தலைவர்களாக ஏற்பார்கள் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார். வினோஜின் இந்த “இன்ஸ்டால்மென்ட் அரசியல்” விமர்சனம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.