பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் அதிரடி ஆட்டங்களுக்குப் பெயர் போனது என்றாலும், தற்போது களத்திற்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. பெஷாவர் சல்மி அணியின் நட்சத்திர வீரர் முகமது ஹாரிஸ், போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே டக்-அவுட் அருகே மிகவும் அமைதியாகத் தொழுகை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

விளையாட்டில் எவ்வளவு ஈடுபாடு இருந்தாலும், தனது இறை வழிபாட்டையும் கடமையையும் அவர் தவறவிடாத அந்த ஒழுக்கத்தை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர். “கிரிக்கெட்டையும் தாண்டி ஒரு மனிதன் தனது கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதற்கு ஹாரிஸ் ஒரு உதாரணம்” எனப் புகழ்ந்து தள்ளுகின்றனர் ரசிகர்கள்.

 

மற்றொருபுறம், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு பி.எஸ்.எல் சி.இ.ஓ சல்மான் நசீர் செய்த ஒரு காரியம் சிரிப்பலைகளை உருவாக்கியுள்ளது. பாபர் அசாமுக்கு யாரோ கண்ணே பட்டுவிட்டது போல, அவருக்குத் திஷ்டி கழிக்கும் விதமாகச் சல்மான் நசீர் செய்த சைகை கேமராவில் சிக்கியது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? “எவ்வளவு சுத்திப்போட்டாலும் அவர் டக்-அவுட் தான் ஆகப்போறாரு” என கமெண்ட்களைத் தட்டிவிட்டு மீம்ஸ்களாகப் பறக்கவிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் முகமது ஹாரிஸின் பக்தி, மறுபக்கம் பாபர் அசாமுக்கு சுத்திப்போடும் கலாட்டா எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது.