குடும்பப் பாசத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, நான்கு வயது சிறுவனுக்கு ஆசிட் கொடுத்துக் கொல்ல முயன்ற பெண்ணின் செயல் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐதராபாத், போடுப்பல் பகுதியில் உள்ள சீனிவாச காலனியில் ஒரு கூட்டுக் குடும்பம் வசித்து வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் மஞ்சுளா என்ற பெண், தனது குடும்பத்தினர் தன் மகனை விட, தனது மூத்த அக்காவின் மகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நீண்ட நாட்களாக ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

சமீபத்தில், அந்த வீட்டின் தாத்தா தனது மூத்த பேரனின் பெயரைப் கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இது மஞ்சுளாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் அந்த நான்கு வயது சிறுவனைப் பழிவாங்க அவர் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று, சிறுவனை சமையலறைக்கு அழைத்துச் சென்ற மஞ்சுளா, சாக்லேட் தருவதாக ஆசை காட்டியுள்ளார். பின்னர், ஜூஸ் என்று கூறி அந்தச் சிறுவனுக்கு ஆசிட்டைக் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார். இதனால் சிறுவன் அலறவே, பதறியோடி வந்த பெற்றோர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இது குறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மஞ்சுளாவைக் கைது செய்துள்ளனர். இதற்கு முன்பும் சில முறை அந்தச் சிறுவனை மஞ்சுளா காயப்படுத்த முயன்றதும், அதனை குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறான். மேலும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட மனக்கசப்பு, ஒரு பிஞ்சுச் சிறுவனின் உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.