நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் மனிதவள மேலாளர் மீது மதமாற்றப் புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது பிரபல கண்ணாடி விற்பனை நிறுவனமான ‘லென்ஸ்கார்ட்’ (Lenskart) நிறுவனமும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஆடை மற்றும் அலங்கார வழிகாட்டுதல்  தொடர்பான ஆவணம் ஒன்று இணையத்தில் கசிந்தது. அதில் உள்ள விதிகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அந்த ஆவணத்தில் உள்ள விதிகளின்படி, பெண் ஊழியர்கள் பணிக்கு வரும்போது ‘ஹிஜாப்’ அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து மத அடையாளங்களான பொட்டு திலகம்  மற்றும் கைகளில் கட்டப்படும் காப்பு (ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபல சமூக ஆர்வலர் ஷெபாலி வைத்யா இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், “லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் ஹிஜாப்பிற்கு அனுமதி அளிக்கும்போது, பொட்டு மற்றும் திலகத்திற்கு மட்டும் ஏன் தடை?” என்று கேள்வி எழுப்பி நிறுவனத்தின் நிறுவனர் பியூஷ் பன்சாலை டேக் செய்துள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓ-வுமான பியூஷ் பன்சால் விளக்கம் அளித்துள்ளார். அதில், “தற்போது கசிந்துள்ள ஆவணத்திற்கும் நிறுவனத்தின் தற்போதைய கொள்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நிறுவனத்தின் ஆடைக்கட்டுப்பாடு விதிகளில் ஏற்கனவே மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மத அடையாளங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்த பழைய ஆவணம் குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.