மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் நகரில், பில்லி சூனியம் மற்றும் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி பெண் கிராபிக் டிசைனர் ஒருவரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் லலித் பாட்டீல் என்ற போலி சாமியாரும், அவருக்கு உடந்தையாக அவரது மனைவியும் பெண் போலீஸ் அதிகாரியுமான மகிமா (எ) மனோரமா பாட்டீலும் செயல்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பப் பிரச்சனையைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகிமா, தனது கணவருக்கு தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். பின்னர் லலித் பாட்டீல், “உன் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட மைத்துனரின் ஆவி உலவுகிறது, பில்லி சூனியம் செய்யப்பட்டுள்ளது” எனப் பயமுறுத்திப் பூஜைகளைத் தொடங்கியுள்ளார்.

இதற்காக உஜ்ஜைனி சுடுகாடு, ஓம்காரேஸ்வர் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தனோட் மாதா கோயில் வரை அழைத்துச் சென்று அகோரி பூஜைகள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சந்தேகம் அடைந்த பெண் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, “நான் ஒரு அகோரி, பணத்தைக் கேட்டால் உன் ஏழு தலைமுறையும் அழிந்துவிடும்” என லலித் பாட்டீல் மிரட்டியுள்ளார். இது குறித்து 2022-லேயே போலீசில் புகார் அளிக்கப்பட்டும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்தத் தம்பதி தலைமறைவாகவே உள்ளனர்.

குற்றவாளி ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் வழக்கில் தொய்வு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்தப் பெண், தற்போது ஜல்காவ் எஸ்பியை நேரில் சந்தித்துத் தனக்கு நீதி பெற்றுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.