மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், சுமார் 180 சிறுமிகளைப் பாலியல் வலையில் வீழ்த்தி, 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்த முகமது அயாஸ் என்பவரின் வீடு அதிரடியாக இடிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று சீரழித்த அயாஸ், அந்த வீடியோக்களை வைத்து அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபட மிரட்டியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அயாஸிடம் போலீஸார் நடத்திய சோதனையில், அவனது செல்போனில் இருந்த நூற்றுக்கணக்கான வீடியோக்களைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்து போயினர். தற்போது அவன் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அயாஸின் வீடு சட்டவிரோத ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜேசிபி இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாஜக எம்.எல்.ஏ. பிரவீன் தயாடே முன்னிலையில், அயாஸின் வீட்டின் ஒரு பகுதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் எம்.பி. அனில் போண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்தவனுக்கு வழங்கப்பட்ட இந்த “புல்டோசர்” தண்டனை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
