தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மண்ணச்சநல்லூர் இளம்பெண் தற்கொலை விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினை நோக்கி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஜனநாயகத்திற்குப் புறம்பாக 8,000 ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யப்பட்டபோது, அதைக் கேள்வி கேட்ட பெண்ணை திமுகவினர் ஆபாசமாகப் பேசி வசைபாடியதாகக் கூறப்படுகிறது. இந்த இழிவான செயலைத் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சகோதரி, தனது உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள விஜய், “திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது, இது உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?” என நேரடியாக முதல்வரைச் சாடியுள்ளார். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினரின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டித்துள்ள விஜய்யின் இந்தப் பதிவு, தற்போது இணையத்தில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
