நான் 15 ஆண்டுகளாக மக்களைக் காதலித்துக் கத்திக் கொண்டிருக்கிறேன். எனது ஒருதலைக் காதல் எப்போது வெற்றிக் காதலாக மாறும்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்புவனத்தில் உருக்கமாகத் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது தனது அரசியல் பயணம் மற்றும் மக்களின் மனநிலை குறித்து அவர் கிண்டலாகவும், அதே சமயம் ஆதங்கத்துடனும் பேசியதாவது,

கடந்த 15 ஆண்டுகளாக நான் மக்களைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன். என் காதல் மக்களுக்குப் புரிந்துவிட்டால், நான் வெற்றிபெற்று விடுவேன். ஆனால், நீண்ட நாட்களாக இது ஒருதலைக் காதலாகவே நீடிக்கிறது. மக்கள் என்னை இன்னும் கண்டுகொள்ளவில்லை. மற்ற அரசியல் கட்சியினரைப் போலவே நானும் ஏமாற்றலாம் என்று சில நேரங்களில் யோசிப்பதுண்டு. ஆனால் அதற்கு என் மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய் தருவதாகக் கூறினால் மக்கள் நம்புகிறார்கள். நான் ஒரு படி மேலே போய், ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன்’ என்று சொன்னால் மக்கள் சிரிக்கிறார்கள்.

அவர்கள் சொன்னால் மட்டும் நம்புவது ஏன்?. சரி, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் தலா ஒரு கிலோ தங்கம், புதிதாகத் திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரம் மற்றும் அவர்கள் விரும்பிய வெளிநாட்டுக்குத் தேனிலவு செல்ல அரசே ஏற்பாடு செய்யும். இதைச் சொன்னால் நம்புவீர்களா? வேறு ஏதேனும் வேண்டுமா?” என்று சிரித்துக்கொண்டே கலகலப்பாகக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தனது உரையில் தீவிரமான கருத்துகளை முன்வைத்த சீமான், “மக்கள் திருந்த வேண்டும். இதுபோன்ற போலி இலவசங்களை நம்பாதீர்கள். நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு இருவருக்கு அரசு வேலை வழங்குவேன். தமிழகத்தில் ஒரு வட இந்தியர் கூட இருக்க மாட்டார். படிப்புக்கேற்ற வேலை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மதுக்கடைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். மது காய்ச்சப்படமாட்டாது, விற்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக உடலுக்கு நலம் பயக்கும் பனம்பால், தென்னம்பால் போன்றவை விற்பனை செய்யப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.